S6 08-11-2022 Day 30 Live

LIVE 1
   

 LIVE 2
   

 VIDEO
 



 

பிக் பாஸ் 6, நாள் 25: ரச்சிதா ஏரியாவில் டேரா போடும் ராபர்ட்; மைனா ‘காமெடி பீஸ்’ இல்லை!



பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை விமர்சித்தே பழகிவிட்டோம். ஒரு மாறுதலுக்கு பாராட்டியே இன்று ஆரம்பிப்போம். இந்த எபிசோடில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் சிலரின் பங்களிப்பு அற்புதம். விக்ரமன் குழு எடுத்துக்கொண்ட கான்செப்ட்டும் நடிப்பும் அருமை. அமுதவாணனுக்குள் ஒரு திறமையான குணச்சித்திர நடிகர் இருக்கிறார். ஆனால் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டவர் மைனா. கூட நடித்த மணிகண்டன் கலக்கியிருந்தாலும் மைனா பிரமிக்க வைத்து விட்டார். அத்தனை சிறப்பான நடிப்பு. இதுபோன்ற திறமைசாலிகளை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்த வேண்டும். கமல் இதற்கு முன்முயற்சி எடுக்கலாம்.
மூன்றாவது சீசனில், ‘ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் தர்ஷன் நடிப்பார்’ என்று கமல் டோக்கன் எல்லாம் கொடுத்தார். அது என்னவாயிற்று என்று தெரியவில்லை. அது போகட்டும். பிக் பாஸில் அடையாளம் காணப்படும் திறமைசாலிகளை இனியாவது அவர் பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

நாள் 25-ல் நடந்தது என்ன?

‘அந்த டிவி’யில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நிலையத்தில் இருந்து ஜனனி கேள்விகளை முன்வைக்க, களத்தில் இருந்து தலையாட்டிக் கொண்டே செய்தி சேகரித்தார் விக்ரமன். ஆக்டிவிட்டி ஏரியாவில் திடீரென்று ஆவேசம் அடைந்த மணிகண்டனிடம் அதற்கான காரணத்தைப் பற்றி விசாரிக்க “அப்படில்லாம் ஒண்ணுமில்ல” என்று சாதாரணமாகச் சொல்லி பரபரப்பு செய்தியை ‘நமத்துப் போன பட்டாசு’ செய்தியாக மாற்றினார் மணிகண்டன்.

விக்ரமன், மணிகண்டன்
விக்ரமன், மணிகண்டன்

வாரக் கடைசி பஞ்சாயத்தில் ‘பாத்திரம் கழுவும் அணி’ நிறைய விமர்சிக்கப்படும் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு தொடர்ச்சியான புகார்கள். கூப்பிடும்போதெல்லாம் ‘போயிட்டே இருங்க... இதோ வந்துடறேன்’ என்று சொல்லி விட்டு ஒய்யாரமாகப் படுத்து விடும் ராம் மீது நிறைய கண்டனங்கள் வரலாம். “தட்டுல்லாம் அங்காங்கே அப்படியே கிடக்குது... உங்க வீடா இருந்தா இப்படி போட்டு வைப்பீங்களா?” என்று ஆவேசமாக கேள்வி கேட்டபடி வீடெங்கும் உலவிக் கொண்டிருந்தார் ஜனனி. பாத்திரம் கழுவாத பிரச்னையின் வாசனை எபிசோட் முழுக்க தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தது.

சரவெடியாகக் கிளம்பி புஸ்வாணமான ஏடிகே!

‘நலம்தானா.. நலம்தானா?’ பாடலோடு நாள் 25 விடிந்தது. ரச்சிதாவின் முன்பாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார் ராபர்ட். ‘சீதை இருக்கும் இடம்தான் ராமனுக்கு அயோத்தி’ என்கிற மோடில் ரச்சிதா இருக்கும் ஏரியாவில் டேரா போடுவதுதான் இவரது அன்றாட வேலையாக இருக்கிறது.

‘‘இப்ப பாரேன்.. ஜீவா பல்லைக் கடிக்கப் போறான்...’’ என்கிற ‘பசங்க’ படத்தின் பக்கோடா மாதிரி, அசிமின் நல்ல குணங்களைப் பரப்பும் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார் ஏடிகே. ராமின் காதில் அவர் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் அதே புராணம்தான். “அசிம் நல்லவன்தான். ஆனா இந்தக் கோபம்தான் பிரச்னை... கொஞ்சம் ட்ரீட்மென்ட் கொடுத்தா சரியாகிடுவான். விக்ரமனை எனக்குப் பிடிக்கும். ஆனா அவரோட மென்டாலிட்டிதான் பிடிக்கல” என்றெல்லாம் ஏடிகே சீரியஸாக சொல்லிக்கொண்டே போக ‘ஒரு கதை சொல்லு ராம்’ என்கிற ‘தேவயானி’ மோடில் பாதி உறக்கத்தில் தலையாட்டிக் கொண்டிருந்தார் ராம்.

பிக் பாஸ் 6, நாள் 25
பிக் பாஸ் 6, நாள் 25

தனலஷ்மிக்கும் ஏடிகேவிற்கும் இடையில் ஒரு நாள் கடும் பஞ்சாயத்து நிகழலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. யாரோ தட்டில் வைத்து விட்டுப் போயிருந்த உணவை எடுத்து குப்பைத் தொட்டியில் கொட்டப் போனார் தனலஷ்மி. “நாங்கதான் க்ளீனிங் டீம்... அப்படியே வெச்சிருங்க” என்று ஏடிகே சொன்னாலும் தனலஷ்மி கேட்கவில்லை. ‘அதை மிரட்டலா சொல்லாதீங்க’ என்று வழக்கம் போல் எளிதில் பற்றிக் கொள்ளும் மோடிற்கு தனலஷ்மி சொல்ல, வேகமாக தனலஷ்மியை நோக்கிச் சென்றார் ஏடிகே. ‘பெரிய சண்டை நடக்கப் போகுது போல’ என்று நாம் திகிலடைந்தால் ‘தப்பு–ன்னு பட்டா நீ சொல்ற மாதிரி எனக்கும் சொல்லத் தோணும்’ என்பதை அரை நிமிடத்தில் சொல்லி விட்டு வேகமாகத் திரும்பினார் ஏடிகே. (இதுக்குத்தான் அம்பூட்டு ஸ்பீடா போனதா?!)

அருமையாக அமைந்த விக்ரமன் அணியின் நாடகம்!

‘அந்த’ டிவியின் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆயிஷா. முதலில் வந்த ஜனனி ‘நன்னாரே...’ பாடலுக்கு நளினமான அசைவுகளுடன் அருமையாக நடனம் ஆட, ராபர்ட் மனம் திறந்து பாராட்டினார். ஷிவினும் ஷெரினாவும் அட்டகாசமான ஆடைகளுடன் ஃபேஷன் ஷோ உலா வந்து அசத்தினார்கள்.

குயின்சி | பிக் பாஸ் 6, நாள் 25
குயின்சி | பிக் பாஸ் 6, நாள் 25

‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுது’ பாடலுக்கு குயின்சி நடனம் ஆடிய விதம் அருமை. அவரது அசைவுகளும் முகபாவங்களும் சிறப்பாக இருந்தன. இதை ராபர்ட் பாராட்டியது ஓகே. ஆனால் ஜமீன்தார்கள் காலம் மாதிரி தலையைச் சுற்றி ரூபாய் நோட்டைத் தந்தது சற்று நெருடலான காட்சியாக இருந்தது. ஷெரினாவும் குயின்சியின் நடனத்தைப் பாராட்ட, தூரத்தில் இருந்த ஜனனியின் முகம் வாடிப் போனது.

விக்ரமனும் ரச்சிதாவும் கணவன் - மனைவி. அமுதவாணன் இவர்களின் மகன். (பயப்படாதீர்கள்... இப்படியான கேரக்டர்களில் அடுத்து ஒரு நாடகம்). கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணியில் இருப்பவர் விக்ரமன். ஒரு வீட்டில் பணிக்குச் செல்லும் போது சாக்கடைக்குள் இறங்கி விஷவாயு தாக்கி இறந்து விடுகிறார். அவரது மகனும் மனைவியும் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்கள். கல்லூரிக்குச் செல்லும் மகன் “நான் எப்படியாவது இதற்கு மெஷின் கண்டுபிடிப்பேன்” என்று சபதம் ஏற்கிறான். ‘மனிதக் கழிவை மனிதன் அள்ளும் அவலத்தை நிறுத்துவோம்” என்று அசிம் சொல்லும் வரிகளோடு நாடகம் நிறைவுற்றது.
விக்ரமன், அமுதவாணன் | பிக் பாஸ் 6, நாள் 25
விக்ரமன், அமுதவாணன் | பிக் பாஸ் 6, நாள் 25
இருக்கிற ப்ராப்பர்ட்டிகளை வைத்துக்கொண்டு, சாக்கடைக்குள் இறங்கி மூச்சுத் திணறி உயிர் விடும் சம்பவத்தை விக்ரமன் அருமையாக நடித்துக் காட்டினார். அது நாடகம் என்று தெரிந்தாலும் கூட சம்பவத்தின் தாக்கத்தால் சுற்றியிருந்தவர்கள் திகைத்துப் போய் கண்கலங்கினார்கள். கழிவுகளின் நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் மூக்கைப் பொத்திக்கொள்ளும் ஆசாமிகளாக ஷிவினும் குயின்சியும் நடித்திருந்தார்கள். அமுதவாணனின் அழுகையுடன் கூடிய நடிப்பு நன்றாக இருந்தது. கடந்த வார பஞ்சாயத்து நாளில் கமல் சொன்ன ‘செய்தி’யின் தாக்கத்தினால் இதை உருவாக்கினார்கள் என்பது வெளிப்படை.

நடனத்திலும் நடிப்பிலும் அசத்திய மைனா!

அடுத்ததாக ‘இந்த டிவி’ தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது. இதன் தொகுப்பாளர் மகேஸ்வரி. ‘போட்டுத் தாக்கு’ என்கிற பாடலுக்கு மைனாவும் மணிகண்டனும் ஆடினார்கள். மைனாவின் குத்து ரகளையாக இருந்தது. சினிமாவில் இந்தப் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்த ராபர்ட்டே மைனாவை மனம் திறந்து பாராட்டினார்.

ஏடிகேவும் கதிரவனும் இணைந்து அடுத்த இசை நிகழ்ச்சியைத் தந்தார்கள். யார் பாட்டுக்கும் தாளம் போடாத கதிரவன், பாடல்களுக்குத் தாளம் போடுவதில் வல்லவராகத் திகழ்கிறார். ஏடிகே ஜதி சொல்ல, கதிரவன் தாளம் போட்ட இந்த நிகழ்ச்சியும் அருமை.

ஏடிகே, கதிரவன் | பிக் பாஸ் 6, நாள் 25
ஏடிகே, கதிரவன் | பிக் பாஸ் 6, நாள் 25

பாத்திரம் கழுவுவதில் மட்டுமல்ல, நடனமாடுவதில் கூட ராம் சுணக்கமானவர் என்று தெரிந்தது. பளபள உடையில் வந்த அவர், சுற்றி அத்தனை பெண்கள் இருந்தாலும் கூட ஏதோ வாக்கிங் போய் விட்டு உடம்பை சற்று அசைத்தபடி ‘நடனத்தை’ முடித்தார். பாக்யராஜ் கூட இதை விட சிறப்பாக ஆடியிருப்பார்.

அடுத்ததாக ‘குக்கூ’ திரைப்படத்தின் பாடலான ‘ஆகாசத்த நான் பார்க்கறேன்’ பாடலுக்கு மைனாவும் மணிகண்டனும் நடனம் ஆடி நடித்தார்கள். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளாக இருவரின் நடனமும் நடிப்பும் அருமை. இதில் மைனாவின் பங்களிப்பு கூடுதல் சிறப்புடன் இருந்தது. அவரின் நடிப்பும் உடல்மொழியும் அத்தனை கச்சிதம். தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து விட்டார். ஆனால் ஏன் இவரை ரியாலிட்டி ஷோக்களில் ‘காமெடி பீஸ்’ ஆகவே பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இறுதியில் நடந்த சம்பவத்தைப் பார்த்து அனைவருமே கண்கலங்கி விட்டார்கள்.

மைனா, மணிகண்டன் | பிக் பாஸ் 6, நாள் 25
மைனா, மணிகண்டன் | பிக் பாஸ் 6, நாள் 25

எண்பதுகளின் திருமணங்களில் ‘வாழ்த்து மடல்’ போன்ற ஒன்றை எழுதி கண்ணாடி சட்டத்தில் இட்டு நண்பர்கள் எடுத்து வந்து வாசிப்பார்கள். அதைப் போன்ற ஒன்றை எழுதி ‘கவிதையாக’ வாசித்துக் கொண்டிருந்தார் அசிம். சுற்றியிருந்தவர்கள் கொட்டாவியை அடக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘செய்திகள் வாசிப்பில்’ நடந்த கொலைவெறி பஞ்சாயத்துக்கள்!

பாயிண்ட்ஸ்கள் தரும் நேரம். இரு அணிகளின் நீதிபதிகளுமே பரஸ்பரம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டு பத்து பாயிண்ட்டுகளை அள்ளித் தந்து அசத்தினார்கள். ‘சண்டை சச்சரவு இல்லாமல் பாயிண்ட் சடங்கு நடந்து முடிந்ததே’ என்று நாம் ஆச்சரியப்பட்டால்... அதுதான் இல்லை. அந்தச் சமயத்தில் அந்த வீட்டின் வடக்கு மூலையில் ‘விதி’ நின்று கொலைவெறியுடன் சிரித்துக் கொண்டிருந்தது என்பதைப் பலர் கவனிக்கவில்லை.
விக்ரமன் | பிக் பாஸ் 6, நாள் 25
விக்ரமன் | பிக் பாஸ் 6, நாள் 25

இரண்டு அணிகளிலும் இரண்டு தனித்தனி பஞ்சாயத்துக்கள் பிறகு ஓடின. முதலில் ‘அந்த டிவி’ பஞ்சாயத்தைப் பற்றி பார்ப்போம். ‘குயின்சி செய்தி வாசித்தால் நன்றாக இருக்கும்’ என்று யாரோ யோசனை சொல்ல மற்றவர்களும் ஆவலாக அதை ஆமோதித்தார்கள். ஆனால் அடிபட்ட முகத்துடன் ‘நான் வாசிக்கலை’ என்று மறுத்து விட்டார் குயின்சி. சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அதற்கான காரணம் தெரிந்தது. ‘யாரை வாசிக்கச் சொல்லலாம்?’ என்கிற கலந்துரையாடலின் போது ‘குயின்சி வேண்டாம்’ என்று முகச்சுளிப்புடன் விக்ரமன் மறுத்து விட்டார் போலிருக்கிறது. இதை குயின்சி கவனித்து விட்டார். இதுதான் அவரது மௌன கோபத்திற்கு காரணம். குயின்சியை சமாதானம் செய்தார் விக்ரமன்.

சொந்த அணிக்கு எதிராக சாட்சியம் சொன்ன அசிம்

அடுத்ததாக ‘இந்த டிவி’யில் நடந்த பஞ்சாயத்து. ‘பிரேக்கிங் நியூஸ்லாம் எழுத வேணாம். அதை அப்படியே நான் ஃப்ளோல சொல்லிடுவேன்’ என்று அசிம் சொன்னார். மைனாவும் மகேஸ்வரியும் ஆட்சேபித்தார்கள். பிறகு ‘பிரேக்கிங் நியூஸ்’ என்கிற பெயரில் ஒரு கட்டுரையே எழுதி வந்தார் அசிம். “ஷார்ட்டா இருக்கணும். அதுதான் பிரேக்கிங் நியூஸ்’ என்று அது மறுக்கப்பட, எரிச்சலானார் அசிம்.

இரண்டு சேனல்களுக்கும் ‘செய்தி வாசிப்பு’ போட்டி ஆரம்பித்தது. நிலையத்தில் இருந்து நிவா பேச, செய்தியாளராகக் களத்தில் இறங்கினார் மகேஸ்வரி. பொதுமக்களில் ஒருவராக மணிகண்டன் வந்து ‘வேற லெவல்’ என்று சேனலைப் பாராட்டினார்.

நிவா | பிக் பாஸ் 6, நாள் 25
நிவா | பிக் பாஸ் 6, நாள் 25

அடுத்ததாக ‘இந்த டிவி’யின் செய்தி. நிலையத்தில் விக்ரமன் இருக்க, களத்தில் அமுதவாணன் இறங்கினார். ராபர்ட் தலைமையில் மக்கள் அலைகடலாகக் கூடி பாராட்டினார்கள்.

பாயிண்ட்ஸ் சொல்லும் நேரம். நீதிபதிகளாக இருந்த விக்ரமனும் ரச்சிதாவும் ஏழு பாயிண்ட்டுகளை எதிரணிக்கு வாரி வழங்கினார்கள். இதை எதிரணியே எதிர்பார்க்கவில்லை. சந்தோஷத்தில் கைத்தட்டினார்கள். இவர்களும் நியாயமாக ‘பதில் மொய்’ வைத்திருக்க வேண்டும்தானே? அதுதான் இல்லை. அடுத்து வந்த நீதிபதியான மகேஸ்வரி ஐந்து பாயிண்ட்டுகள் மட்டுமே தர, கலவரம் வெடித்தது. “விக்ரமன் இன்னமும் நல்லாப் பேசியிருக்கலாம்.. களத்துலதான் சம்பவம் நிறைய நடந்தது. செய்தி அறையில் ஒன்றுமே நடக்கலை’’ என்பது மகேஸ்வரி சொன்ன காரணம்.

விக்ரமன் | பிக் பாஸ் 6, நாள் 25
விக்ரமன் | பிக் பாஸ் 6, நாள் 25

‘‘மக்கள் பெருந்திரளாக வந்த சம்பவமே ஸ்டூடியோ வாசலில்தான் நடந்தது” என்று விக்ரமனும் அமுதவாணனும் இந்தக் காரணத்தை மறுக்க “அதை நாங்க கவனிக்கலை... கவனிக்கிற மாதிரி நீங்க சொல்லலை. சத்தத்துல அடங்கிப் போச்சு’’ என்று மகேஸ்வரி அணி சாதிக்க ‘‘நாட்டாமை... தீர்ப்ப மாத்திச் சொல்லு’’ என்று அமுதவாணன் அணி மல்லுக்கட்டியது.

எரியும் நெருப்பில் மூலிகை பெட்ரோல் ஊற்றிய கதையாக, எதிரணிக்கு ஆதரவாக சாட்சி சொன்னார் அசிம். இதில் மகேஸ்வரி எரிச்சல் அடைந்தார். ‘‘நியூஸ் வாசிக்க சான்ஸ் தரலைன்னு இப்படி பண்றாரு போல’’ என்று மற்றவர்களிடம் மகேஸ்வரி சொல்ல, இதை அசிமிடம் சொல்லி சரியாகப் பற்ற வைத்தார் விக்ரமன்.

அசிம் | பிக் பாஸ் 6, நாள் 25
அசிம் | பிக் பாஸ் 6, நாள் 25
“உங்களுக்கு ஜட்ஜ் பண்ணத் தெரியலைன்னு சொல்லுங்க’’ என்று மகேஸ்வரியிடம் அசிம் வெடிக்க, “சரி... சரி... கௌம்புங்க” என்று சுருதியைக் குறைத்துப் பேசினார் மகேஸ்வரி. ‘‘இதே விஷயத்தை முன்னாடி தனலஷ்மி பண்ணும்போது நாம கண்டிக்கலையா?’’ என்று இந்தச் சமயத்தில் மைனா சொன்ன பாயிண்ட் சரியானது.
Similar Movies

0 comments: